சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.

'வேருக்கு நீர்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

இதுபோல எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த எண்பத்தி இரண்டு வயதான ராஜம் கிருஷ்ணன் இன்று இருப்பதோ பாலவாக்கம் விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில்!

குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.

மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.. என்று முதுமையின் வாட்டம் தெரிந்தாலும் பேச்சின் கம்பீரம் என்னவோ அப்படியே இருக்கிறது.

''என்னை எதுக்குப் பார்க்க வந்திருக்கீங்க? ஐ'ம் ஜஸ்ட் எ டஸ்ட்'' என்றவரை ஆசுவாசப்படுத்திப் பேச்சுக் கொடுத்தோம்..

''அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க. இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லை'' என்றபடியே பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தார்.

''1925-ல முசிறியில பிறந்தேன். சின்ன வயசுலயே எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா, என் பெற்றோர் என்னை ஸ்கூலுக்கு அனுப்பலை. அந்தக் காலத்துல பெண்கள் வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க. எனக்கும் பதினைந்து வயதில் பால்ய விவாகம் நடந்தது.

ஒன்பது நாத்தனார், மாமியார், மாமனார்னு நான் வாழ்க்கைப்பட்டது பெரிய குடும்பம். ரொம்பவே கஷ்டப்பட்டோம். என் கணவர் கிருஷ்ணன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கிப் போடுவார். லைப்ரரிக்குப் போயும் நிறையப் படிப்பேன்.

பதினாறு வயசுல கதைகள் எழுத ஆரம்பிச்சேன். அதெல்லாம் தொடர்ந்து பத்திரிகைகளில் பிரசுரமாகி, எழுத்தாளர்கள் வரிசையில் எனக்கு ஒரு தனி இடம் கிடைச்சது'' என்றவர் முகத்தில் மெலிதான பூரிப்பு. தொடர்ந்த ராஜம் கிருஷ்ணன்,

''தாம்பரத்துல மூணு கிரவுண்ட்ல வீடு வாங்கினோம். நிம்மதிக்குக் குறைவில்லை. நான் கதை எழுதும்போதெல்லாம் என் கணவர் பேனாவுக்கு மை போட்டுத் தருவார். என் துணிமணிகளை அயர்ன் பண்ணித் தருவதும் அவர்தான். என் கதைகளைப் படிக்கக்கூட அவருக்கு நேரம் இருக்காது. ஆனாலும், நான் எழுத அவ்வளவு ஊக்கம் கொடுத்தார்..'' என்று நெகிழ்ச்சியோடு சொன்னவர், தன் எழுத்து அனுபவங்களின் பக்கமாகப் பேச்சைத் திருப்பினார்.

''1970-ல் தூத்துக்குடி உப்பளத்துக்குப் போய் அங்கு வாழும் மீனவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடையாது. மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டே வாழ வேண்டிய நிலை. பரிதாபத்துக்குரிய அந்த மனிதர்களின் அவல நிலையை 'கரிப்பு மணிகள்' என்ற நாவலாக எழுதினேன். அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.

1972-ல் பீகாரில் கொள்ளையர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்த சமயம். அப்போ அந்த கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து பல மாதங்கள் அவர்களுடனே இருந்து பார்த்தவற்றை 'முள்ளும் மலரும்' என்ற தலைப்பில் எழுதினேன்.

பெண் சிசுக் கொலை, கோவா விடுதலை, சோவியத் நாடுகள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் என நான் எழுதாத விஷயங்களே இல்லை. பாரதியார் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால், 'முற்போக்குவாதியான பாரதியின் இறப்புக்குப் பின் செல்லம்மாளுக்கு மொட்டை அடித்தது ஏன்?' என்ற விவகாரத்தை ஆராய்ந்து 670 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டேன். இப்படி என்னுடைய 80-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது'' என்று நிறுத்தியவர், எதையோ நினைவுக்குக் கொண்டு வந்தவர் போல மேலே பேசினார்.

''ஒரு கட்டத்தில் என் கணவருக்குப் பக்கவாதம் தாக்கி நடமாட முடியாமப் போச்சு. தன்னோட தொண்ணூறாவது வயசுவரைக்கும் எனக்குத் துணையாவும் தூணாவும் இருந்தார். எங்களுக்குக் குழந்தைகளும் இல்லை. அவர் மறைவுக்குப் பின் 'என் ஒருத்திக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு?'னு உறவுகளும், நட்புகளும் கேட்டதால வீட்டை வித்துட்டேன். நான் எழுதிய அத்தனை படைப்புகளையும் எடுத்துச் செல்ல இடம் இல்லாததால் எல்லாத்தையும் தீ வெச்சுக் கொளுத்தினேன்.

கையில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை யார் யாரோ பகிர்ந்துக்கிட்டாங்க. பாங்க்ல இருந்த பணமும் என்னாச்சுன்னு தெரியலை. பங்களாவில் வாழ்ந்த நான் சகலத்தையும் இழந்து சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில வாடகைக்குக் குடிபோனேன். அங்க இருந்தப்போ, வரதட்சணை கேட்டுப் பொண்டாட்டியைக் கொடுமைப்படுத்தறவன்.. தினமும் குடிச்சிட்டு மனைவியை அடிச்சு உதைக்கிறவன்.. இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் பார்த்தப்போ இன்னும்கூட பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலையோன்னு தோணுச்சு'' என்றவரின் குரலில் பெரும் துயர்.

''எட்டு மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்சிடென்ட்ல எனக்குக் கால் எலும்பு முறிஞ்சு போச்சு. ஆபரேஷன் நடந்து அஞ்சு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். என் தோழியான திலகவதி ஐ.பி.எஸ்., பாரதி சந்துரு இருவரும் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்து விட்டாங்க. என்னால இப்ப நடக்க முடியலை. இந்த வாக்கர் உதவியா இருக்கு. எத்தனையோ பேருக்கு ஒரு கஷ்டம்னா ஓடிப்போய் உதவி பண்ணினேன். இப்போ எனக்கு உதவத்தான் யாருமில்லை. பார்ப்போம்..''

கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி அந்த இரும்பு மனுஷி நமக்கு விடை கொடுக்க, சமூகத்துக்காக எவ்வளவோ அக்கறையோடு யோசித்த ஒரு மனுஷிக்கு இந்த சமூகம் செய்திருக்கும் மரியாதையைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது.

 நன்றி - அவள் விகடன்

 








0 comments:

Subscribe